சங்கத்தடம் - கற்புள்ள மலைநாடன்!!!
மலைநாடனும் அன்புக்கினியாளும் காதல் கொண்டனர். காதல் வாழ்வு அவர்களுக்குக் கற்கண்டாய் இனித்ததாலோ என்னவோ, இருமன இணைவிற்குப் பின்னான திருமணத்தைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. இதனால் தோழி வருந்தினாள். இவர்களின் அன்புப்பயிர் வளர நாளும் துணையிருந்து எவ்வித சிக்கலும் வராமல் காத்தவள் அவள்தான். இருப்பினும் இன்னும் எத்தனை நாள் தான் யாரும் அறியாமல் அவர்கள் சந்தித்துக் கொண்டிருப்பது, இவளும் காவல் காப்பது. ஒவ்வொரு முறையும், இக்காதல் பறவைகள் சந்திக்கும் போதெல்லாம், தோழிக்குத்தான் உயிர் போய் உயிர் வரும்... யார் கண்களிலும் இவர்கள் சிக்கிவிடக் கூடாதே எனப் பயந்து பயந்து. ஆனால் இதெல்லாம் அக்காதலர் கண்களுக்குத் தெரிவதே இல்லை. அதனால் தான், காதலுக்குக் கண்ணில்லை என்றார்களோ அனுபவசாலிகள்!.
பலமுறை அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி தோழி வலியுறுத்தியும் அக்காதலர்கள் அது குறித்து கவலை கொள்ளாது களவு வாழ்விலேயே இன்பம் கண்டு வந்தனர். எவரும் அறியாமல் மேற்கொள்ளப்படும் உறவாக இருப்பதால் களவு எனக் காதலைச் சுட்டினர் நம்முன்னோர். சரி கதைக்கு வருவோம். ஆனால், தோழியால் இதற்கு மேலும் அமைதி காக்க முடியவில்லை. எப்படியாவது இக்களவு வாழ்வை கற்பாகிய திருமண வாழ்விற்கு உயர்த்திவிட வேண்டும் என முடிவு செய்கிறாள். அதற்காக ஒரு திட்டமும் வகுக்கிறாள். தலைவியிடம் அவ்வப்போது, அவர்களின் அன்பு பற்றி குறைத்து மதிப்பிட்டுப் பேசுகிறாள். தலைவனின் குணத்தைப் பற்றியும் தவறாக ஏளனம் செய்கிறாள். அப்படிப் பேசினால் தலைவி தன் காதலின் உயர்வைக்காட்ட அவனைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுப்பாள் என நினைத்து அவ்வாறு செய்கிறாள் தோழி. ஆனால் தலைவியோ, தோழி விளையாட்டாகச் சொல்கிறாள் என நினைத்து அதைப் பெரிதுபடுத்தவில்லை.
எனினும், தன் முயற்சியை கைவிடவில்லை தோழி. இனித் தலைவியிடம் மட்டும் பேசிப் பயனில்லை, தலைவனுக்கும் புரியவைக்க முயலவேண்டும் என முடிவெடுக்கிறாள். அதனால், ஒருநாள் தலைவன், தலைவியைச் சந்திக்க வீட்டிற்கு வெளியில் வேலியோரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சமயத்தில், மீண்டும் அவர்களின் காதலைப் பற்றி விமர்சிக்கத் தொடங்குகிறாள் தோழி. உங்களுக்கிடையே அவ்வளவு பெரிய அளவில் அன்பு இருப்பதாகத் தோன்றவில்லையே...ஏதோ இருவரும் தினமும் சந்திக்கிறீர்கள், பேசிக்கொள்கிறீர்கள். இது சாதரணமானது தானே என்கிறாள். அதுமட்டுமா, தலைவன் மலைநாட்டைச் சேர்ந்தவன்...அங்கு கிடைக்காத பூக்களா!! அவனும் வண்டாயிற்றே என்றும் பலவாறு கேலியும் செய்கிறாள்.
இம்முறை தலைவியால் பொறுக்க முடியவில்லை. எல்லை மீறித்தான் பேசுகிறாள் இவள். யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். எங்களுக்குள் இருக்கும் அன்பு இவள் நினைப்பது போல் குறுகியதா என்ன? எவ்வளவு பரந்தது! இப்படிச் சொல்லிவிட்டாளே...மனம் ஆறவில்லை தலைவிக்கு. ஆற்றாமையில் அவள் விழிகள், வேறுபுறம் நகர்ந்தன. அங்கு சன்னல். சன்னல் வழியே பரந்து விரிந்திருந்த நிலம். நிலத்தைப் பார்த்தாள்....நிலம் இப்போது அவளுக்குத் தன் காதலை விடச் சிறியதாகவே தோன்றியது. பரவசத்துடன் தோழிக்கு அந்நிலத்தைக் சுட்டிக்காட்டித் தன் காதலின் மகத்துவத்தைத் தோழிக்கு உணர்த்த முற்படுகிறாள் தலைவி.
எங்கள் காதலையா குறைத்துச் சொன்னாய்...இதோ பரந்திருக்கிறதே நிலம்.. 'இந்த நிலத்தை விடப் பரந்துவிரிந்தது எங்கள் காதல்! எனத் தன் கைகளை வானளவிற்கு அகல விரித்துச் சொன்னாள். அதுமட்டுமா? அக்கைகளுக்குள் அடங்கிய வானத்தையும் அவள் விட்டுவைக்கவில்லை. அவ்வானத்தையும் சுட்டி, 'இதோ எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறதே வானம்...இந்த வானைவிட உயர்ந்து சிறந்தது எங்கள் அன்பு' என்றாள் விழிகளை உயர்த்திவாறு பெருமிதத்துடன். அதோடு நின்றாளா... அப்பாசமிகு தலைவி!!. அப்படியே வானின் அடிவாரத்தில் தெரிந்த ஆழ்கடலையும் காட்டினாள். அதோ, 'வானையும் மண்ணையும் இணைத்து நிற்கிறதே, நீலத் திரைகடல். அந்த ஆழ்ந்த கடலையும் விடவும் ஆழமானது, மலைநாடனோடு நான் கொண்டிருக்கிற நட்பு' என்று திண்ணமாய் உரைக்கின்றாள் அவ்வன்புக்கினியாள்.
இவ்வளவு உரைத்த பின்னும் மனம் ஆறவில்லை அத்தலைவிக்கு. என் தலைவனையா பல பூக்களில் தேன் நுகரும் வண்டென்று சாடை பேசுகிறாள். தன் தலைவன், தன் மீது மட்டுமே காதல் கொண்டிருக்கும் கற்புள்ள வண்டு என்பதை அவளுக்கு இன்று புரிய வைத்தே தீரவேண்டும் என்று துடித்தது அவள் மனம்.
அதனால் மேலும் தொடர்கிறாள். ஆம். அவன் பூக்களில் மொய்க்கும் வண்டுகள் மிக்க மலைநாடன் தான். ஆனால், அவ்வண்டுகள் எத்தகையது தெரியுமா? பார்க்கின்ற பூவிலெல்லாம் தேன் குடித்துத்திரியும் கறுவண்டல்ல! 'பன்னிரெண்டு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூவில் மட்டுமே தேன் சுவைக்கும் கற்புள்ளவண்டு!! என்று மலைநாடனின் மாண்பையும் அவனுடனான தன் எல்லையற்ற நட்பையும் பெருமிதத்துடன் அன்புப் பெருக்குடன் வெளிப்படுத்துகிறாள் அக்காதல் தலைவி.
இதையெல்லாம் வெளியே நின்று கேட்ட, தலைவன் நெகிழ்ந்து போனான். இனி இம்மலைநாடனுக்கு அன்புக்கினியாளைத் திருமணம் செய்ய ஒருவர் சொல்லவேண்டுமா என்ன!! ஒருவழியாகத் தோழியின் எண்ணமும் நிறைவேறி விட்டது அல்லவா!! .
தலைவனான மலைநாடன், அவன் ஊரில் எத்தனைப் பெண்கள் இருந்தாலும் தன் காதலியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நினையாத கற்புகொண்ட மனத்தினனாய் இருக்கிறான். அக்கற்பு குணத்தால் தான், தலைவியின் மனதில் உயர்ந்து நிற்கிறான். இப்பாடலில் குறிஞ்சிப்பூவாகத் தலைவி தன்னையும் அப்பூவில் மட்டுமே தேன் உண்ணும் வண்டாக தலைவனையும் குறிப்பிடுகிறாள். தலைவனின் கற்பு குணம் குறிஞ்சிப்பூவில் மட்டுமே தேன் உண்ணும் வண்டின் இயல்பின் மீது ஏற்றிச் சொல்லப்படுகிறது. தேனாக காதல் உணர்த்தப்படுகிறது.
இப்பாடலில் தலைவன் தலைவியின் காதல், அவர்கள் அறியாமலேயே, அவர்தம் மனதிற்குள் சுயமதிப்பிடப்படுகிறது. அப்போதுதான் அவர்களுக்கே புரிகிறது தங்களுக்கிடையே உள்ள அன்பு அளவிடமுடியாதது என்பது. அப்படி மதிப்பிடுவதற்காகவே, தோழி தலைவனைப் பழித்துரைப்பது உதவுகிறது. இது ஒரு உளவியல் உத்தி. காதலர் வாழ்வு சிறக்க இவ்வுத்தி நிச்சயம் உதவும். பொதுவாகவே நம் அன்பிற்குரியவரை எவரேனும் மரியாதையின்றியோ, தரக்குறைவாகவோ பேசினால் நமக்குப் பிடிக்காதல்லவா. அப்போது நம்மை மீறி அவருடைய நன்மதிப்பிற்கு நாம் வாதிடுவோம் அல்லவா. இது மனித இயல்பு தானே. இவ்வியல்பைத்தான் இத்திணையும் பாடலும் எடுத்துரைக்கின்றன.
காதலுக்கு அன்பு மட்டும் போதாது. கற்பும் வேண்டும். கற்பின் வழி நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கையினால் மதிப்புயரும். அம்மதிப்பு தளராத உறுதியைத் தரும். அவ்வுறுதி காதலுக்கு வெற்றிமாலைச் சூட்டும். அவ்வெற்றிமாலை காதலர்க்கு மகிழ்ச்சியைப் பரிசளிக்கும். அம்மகிழ்ச்சிப்பரிசு நல்வாழ்விற்கு கேடயமாய் அமையும். "நல்வாழ்வுக் கேடயத்தைப் பெற்றுத்தரும் காதல்... நிலத்தினும் பெரிதன்றோ! வானினும் உயர்ந்ததன்றோ! கடலினும் ஆழமானதன்றோ"!. நான்கே வரியில். நமக்கெல்லாம் உண்மைக்காதலின் மிகப்பெரும் பெருமிதமாகிய கற்பு, தங்கத்தில் பதிக்கப்பட்ட வைரம் போன்றது எனும் வாழ்வியல் உண்மையை உணர்த்துகின்ற இச்சங்கப்பாடல் என்றென்றும் போற்றப்பட வேண்டிய புதையல் அன்றோ!!! .
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு
நட்பே."
நூல்: குறுந்தொகை, பாடல் எண்: 3, பாடியவர்: தேவகுலத்தார்.
தலைவி கூற்று.
துறை:
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
அதாவது தலைவன் தலைவியைச் சந்திக்க தக்க சமயம் பார்த்து வீட்டின் வேலிப்புறத்தில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கும்போது, தலைவன் விரைந்து தலைவியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற காரணத்தால் தோழி, அவன் இயல்பை தலைவியிடம் பழித்துக் பேசுதல் ஆகும். வரைதல் - திருமணம்.
(தோழி தன் தலைவனைப் பழித்துப் ,பேசும்போது, தலைவி அவனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள். அதைக்கேட்டுத் தலைவன், காதலி தன் மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையும் புரிந்து கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்வான் அல்லவா)


நான்கு வரிகளுக்குள் இவ்வளவு பெரிய கதை இருப்பது அதிசயம். வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் எழுத்துப் பணியை.
ReplyDeleteசிறிய பாடலில் உலகையே அடக்கிவிட்டார்கள். அருமை.
ReplyDeleteKarpendru onru undendraal adhu iru paalarukkum podhuvanro.....Arumaiyana vilakkam
ReplyDelete