சங்கத்தடம் - குற்றம் காணாதது காதல்


 

                 மலரைப்போல் மென்மையான தலைவி ஒருத்தி, தன் மனதிற்கினியத் தலைவனுடன் எவருக்கும் தெரியாமல் சென்று விடுகிறாள். அவள் பிரிவால் பெற்ற தாயும், வளர்த்த தாயும் புலம்புகின்றனர். இருவர் பேச்சிலும் அவள் உலகம் அறியாப்பெண் ஆயிற்றே  இப்போது கணவன் வீட்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறாளோ? எப்படி குடும்பம் நடத்துகிறாளோ?  தெரியவில்லையே என்ற கவலையே அதிகம் இருந்தது. பக்கத்து ஊரில் தான், தங்கள்  மகள் கணவனுடன் வாழ்கிறாள் என்பதை அவர்கள் அறிவார்கள். இருந்தாலும்  கணவனுக்கும் குடும்ப மானத்திற்கும் பயந்து, பெற்றவளால்  தன் மகளை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. செவிலியும் அவர்களிடம்  சொல்லாமல் எப்படி போவது எனத் தயங்கி நின்றாள்.
                இந்நிலையில் செவிலியால், நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கும் பெற்றவளின் மன வருத்தத்தைப்  பார்க்க முடியவில்லை.  தனது  வளர்த்த பாசத்தையும்  கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, பெற்றவளிடம் மட்டும்  ரகசியமாகச் சொல்லிவிட்டு, தம் மகள் வாழும்  ஊருக்குச் செல்கிறாள் செவிலி. அவ்வூரில் கண்ணில்பட்டவர்களிடம் எல்லாம்   தம் மகளின்  அடையாளத்தைச் சொல்லி, விசாரித்து ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடிக்கிறாள்.
   வீடு மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. வசதிகள் பெரிதாக  இல்லை என்பது அவ்வீட்டைப் பார்த்தாலே தெரிந்தது. தாய் வீட்டில் எவ்வளவு வசதியாக வாழ்ந்தப் பெண் இவள். இன்று  இச்சிறிய வீட்டிலா வசிக்கிறாள். பார்க்கும்போதே பதைபதைத்தது அவள் தாயுள்ளம். அப்போது அவ்வீட்டின் சிறிய சன்னல் வழியே ஏதோ புகை வருவது போல் இருந்தது. பதறியடித்துக் கொண்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். பயப்படும்படி  ஒன்றுமில்லை.. யாரோ சமைக்கிறார்கள் போல. பார்த்ததும் புரிந்துகொண்டாள் செவிலி.       
                  யார் இப்படி புகையை கிளப்பிக்கொண்டு சமைப்பது? மேலும்  உற்றுப்பார்த்தாள். திடுக்குற்றாள். இவள்..அவளா? ஆம்! அவளே தான்!!. தான் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்த்த செல்லமகள் தான், அங்கு அடுப்பின் அருகில் புகைமூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்தாள்!. கலங்கிப்போனாள் அவ்வளர்ப்புத்தாய். இதை மட்டும் அவள் அன்னை பார்த்திருந்தால்,  உயிரையே விட்டுவிடுவாளே!. அங்கு எத்தனைப் பணியாளர்கள். எவ்வளவு பெரிய சமையலறை. அது எங்கிருக்கிறது என்பது கூடத்தெரியாதே அவளுக்கு. அப்படிப்பட்டவள் இன்று  இச்சூழலிலா!!. இதற்கா? இப்படியொரு வாழ்க்கைக்கா?  எங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்தாள்? மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. அவளிடம்  கேட்காமல் விடப்போதில்லை என்று நினைத்துக்கொண்டு  வாய் திறக்கும் சமயத்தில் புகைமூட்டம் கலைந்திருந்தது. இப்போது அவள்  முகம் பளிச்சென்று தெரிந்தது. மிக மகிழ்ச்சியுடன், ஆர்வத்துடனும்...கவனத்துடனும் சமைத்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் வெந்து கொண்டிருப்பவளுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா? எப்படி? ஒன்றும் புரியவில்லை செவிலிக்கு. இவ்வளவு ஆர்வத்துடன் அப்படி என்னதான் சமைத்துக் கொண்டிருக்கிறாள் இவள். கவனிக்கத் தொடங்கினாள். ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிரை, காந்தள் பூவினும்  மென்மையான தன் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். அத்தயிர் மிகவும் புளித்துவிட்டது போல! வாடை சன்னலைத் தாண்டி செவிலியின் மூக்கு வரை அடித்தது. அய்யோ என்ன செய்கிறாள் இப்பெண். அதிகம் புளித்த தயிரில் சமைத்தால் நன்றாக இருக்காதே!!. போய்த் தடுத்துவிடலாம், எனத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும், சமையலறைப் பக்கம் கூட வராத தன் ஆசைமகள் சமைத்தால்...எப்படி இருக்கும் எனப்பார்க்க  ஆசையாகவும் இருந்ததால்...அமைதியாகத் தொடர்ந்து  கவனிக்கலானாள். கெட்டித்தயிரைப் பிசையும்போது அதன் துளிகள் முகத்தில் ஆங்காங்கே தெறித்ததைக்கூட கண்டுகொள்ளாமல் தயிர் பிசைவதிலேயே கவனமாக இருந்தாள் அம்மகள். அப்போது காற்றில் அவள் மேலாடை சற்று நழுவியது. மிகப்பாங்காக தயிர் பிசைந்த கையாலேயே விலகிய மாராப்பைச் சரிசெய்தாள். ஆண்டுக்கணக்கில் சமைப்பவர்களுக்குக் கூட இப்பாங்கு வருமா என்ன!!. செவிலிக்கு ஒரே வியப்பு. அதுமட்டுமா, ஒரு கையில் தயிர் கிண்ணத்தைப் பிடித்தபடி, மறுகையால்   அடுப்பில்  தீய்ந்து புகை வந்திருந்த  வாணலியில், எண்ணெய் ஊற்றி  தாளிக்கவும்  தொடங்கினாள். தயிர்குழம்பு வைக்கிறாள் போலும்!! ஆனால் அத்தாளிப்புப் புகை, மையிட்ட அவள் கண்களையும் தாளித்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பிசைந்த தயிரை அதில் ஊற்றினாள். கண்களைச் சிறிது கசக்கிவிட்டு சமைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள். இப்போது அவள் கண்களில் மை கரைந்து வழிந்திருந்தது. ஏற்கனவே முகத்தில் தயிர்ச் சிதறல்கள். இப்போது மை கரைசல்கள் வேறு.....செவிலிக்கே அவளை இக்கோலத்தில் பார்க்க  சிரிப்பு வந்துவிட்டது. இந்நிலையில், கொதி வந்த தயிர்க்குழம்பை மிகத் தேர்ந்த சமையல் நிபுணர் போல கையிலிட்டு ருசிபார்த்துக் கொண்டிருந்தாள். செவிலியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அதற்குள் அவள் கணவன் சாப்பிட வந்துவிட்டான் போலும். அவசர அவசரமாக தட்டை எடுத்து ஆசை ஆசையாகச் சாப்பாடு போடத்தொடங்கிவிட்டாள் அவள்.
               அய்யோ இதையா, இப்புளித்தத் தயிரையா...தீய்ந்த குழம்பையா அவனுக்கு ஊற்றப்போகிறாள். என்ன நடக்கபோகிறதோ...செவிலிக்கு மனதிற்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது. மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு சோற்றைப் பிசைந்து வாயில் வைத்தான் அவள் கணவன், அவன் முகம்... அமிர்தத்தை உண்டது போல் மகிழ்சியாய் பரவசமாய் மாறியது. அம்மகிழ்ச்சியான முகத்துடன் தன்காதல் மனைவியைப் பார்த்து மிகவும் சுவையாக இருக்கிறது என்று கண்களில் காதல் பொங்கச் சொன்னான். காதல் கணவனின் மகிழ்ந்த முகத்தையும் இனிது என்று சொன்ன வார்த்தையையும்  கேட்டு அவ்விளமடந்தை வெட்கப்பட்டு, முகம்.. அகம்.. மலர்ந்தாள்.  அவ்வெட்கத்தை மறைக்க முகத்தை ஒருபுறமாக மெதுவாகத் சன்னல் பக்கமாகத் திருப்பினாள்.
     
 இதைவிட ஒரு தாய்க்கு ஆனந்தம் வேறு என்ன இருக்கப் போகிறது.  இப்படி ஒரு மகிழ்ச்சிப் பூரிப்பினை,  வெட்கிச்சிவந்த முகக்கலையினை இதுவரை மகளிடத்தில் பாராத அத்தாயுள்ளம் ஆனந்தத்தில்  சிலிர்த்தது. அவள் தங்களை விட்டுச்சென்ற காரணமும் புரிந்தது. கண் வழியே ஆனந்தக் கண்ணீர் அரும்பியது. ஆகா!! இதை  மட்டும் அவளைப் பெற்றதாய் பார்த்தால் மகிழ்ச்சியில் உயிரையே விட்டுவிடுவாளே!!   விரைந்து  செல்லவேண்டும். இம்மகிழ்ச்சியானக் காட்சியை அவளுக்குச் சொல்லவேண்டும். அதற்கு முன்பு ..இக்காதல் பறவைகளைத் தொந்தரவு செய்யாமல் உடனே இங்கிருந்து நகரவேண்டும் என நாணத்துடன் சிரித்தவளாய் அங்கிருந்து சென்றாள் அச்செவிலித்தாய்!!!
   
இச்சங்கப்பாடல்,  காதல்வாழ்வில் மட்டுமல்ல திருமண வாழ்விலும்   நிலைத்த அன்புடன் வாழும் இளம் காதல் தம்பதியரைக் காட்சிப்படுத்துகிறது. சமைக்கவே தெரியாமல் நிறைந்த அன்புடன் பார்த்துப் பார்த்து சமைக்கும் தலைவி,   குறையே சொல்லாமல்,  புளித்தத் தயிரை உண்டபோதிலும், இனிக்க இனிக்கக் காதலைக் காண்பிக்கும் தலைவன், இவர்களுக்குள் இருக்கும் அன்பின் முதிர்வைக் கண்டு நெகிழ்ந்து போகும் செவிலித்தாய். இம்மூவரைக் கொண்டு உயர்ந்த காதலை எளிமையாக உணர்த்துகிறார். இப்பாடலின் ஆசிரியர் கூடலூர்கிழார். 
   இன்று பலகுடும்பங்கள், சாப்பாட்டினால் தான் சண்டைக்களமாக மாறுகின்றன. பார்த்துப் பார்த்து சமைக்கும் நிலை  மாறி, பயந்து பயந்து சமைக்கும் நிலையோ அல்லது புலம்பி  வருந்தி சமைக்கும் நிலையோ தான் பெரும்பாலும் காணப்படுகிறது. இச்சூழலில் குற்றம் காணாத, முதிர்ந்த அன்பே முற்றிலும் இனியது. நுட்பமான மகிழ்வை மனதிற்கு தரக்கூடியது. இதை உணர்வதே அனைவருக்கும் நல்லது. 

"முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."

நூல்: குறுந்தொகை
பாடல் எண்: 167, திணை: முல்லை
துறை: கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.
பாடியவர்: கூடலூர் கிழார்
செவிலி கூற்று


முல்லைத்திணை என்பது காடும் காடு சார்ந்த மக்களின் வாழ்வையும் பாடுவது. இத்திணைக்குரிய உணர்வு இரங்கல். 

நற்றாய் என்பவள் மகளைப் பெற்றவள்: செவிலித்தாய் என்பவள்  மகளை உடனிருந்து வளர்த்தவள்

கடிநகர் - மகள் வாழும் காவல் மிக்க ஊரைப் பொதுவில் குறிக்கும்.

மகள் எப்படி வாழ்கிறாளோ என மனமிரங்கித் தவிக்கும் நற்றாய்க்கு அவள் வாழ்கின்ற நிலையை செவிலித்தாய் கண்டுவந்து சொல்லுதல் இத்திணைக்குரிய பொருளாகும். 



Comments

  1. சிறப்பான விளக்கம். தொடருங்கள் உங்கள் இலக்கியப்பணியை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சங்கத்தடம் - கற்புள்ள மலைநாடன்!!!