சங்கத்தடம் - கண்ணியக் காதலன்

             
 
           கண்ணியவான் ஒருவனும் கயமலர்க் கண்ணாள் ஒருத்தியும் காதல் கொள்கின்றனர். அக்காதல் தலைவியோ,  தன் காதல்வாழ்வைத்  தோழிக்குக் கூட தெரியாமல் ரகசியமாகக் காத்து வருகிறாள். ஆனால் தோழி விடுவாளா!  தலைவியிடம், வழக்கத்திற்கு மாறாக சில மாற்றங்கள் இருப்பதையெல்லாம் கவனித்து  அவளின் களவை அதாவது காதலைக் கண்டுபிடித்து விடுகிறாள்.
நெருங்கிய தோழியாகிய தன்னிடமே, தலைவி மறைத்து விட்டாளே என்ற  வருத்தம்  இருந்தாலும், எவரும் அறியாமல் அவர்களைப்  பின்தொடர்ந்து சென்று தலைவியின் காதல் வாழ்வையும் தலைவன் மிக நல்லவன் என்பதையும்  தெரிந்து மகிழ்கிறாள். தன்  தலைவிக்கு உதவும்  எண்ணம் கொள்கிறாள். இருப்பினும்  தலைவியே தன்னிடம் வந்து தன் காதலைப் பற்றிச் சொல்லவேண்டும் எனவும்   விரும்புகிறாள். 
                                              அதற்காக,  அத்தோழி  சாதுரியமாக ஒரு வழிமுறையை கையாள்கிறாள். தலைவியின் காதல் வாழ்வில் நடந்த  நிகழ்வுகளைத் தனக்கு நடந்ததாகக் கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து சொன்னால்... தலைவி  தன்னை மீறி உண்மையை ஒப்புக்கொள்வாள் அல்லவா! எனவே தன் யோசனையை உடனே செயல்படுத்துகிறாள் தோழி!.  
    குளத்தில் பூத்த அழகிய நீலமலர் போன்றவளே! மைபூசியிருக்கும், உன் அழகிய கண்களால் என்னைக் கொஞ்சம்  பார்... எனத்  தலைவியை  அன்பாய் வர்ணித்து அழைத்து, தன்கதையைத் தொடங்குகிறாள் தோழி. அழகிய கண்ணிமாலையைத் தலையில்  அணிந்த  வில்லாற்றலில் வல்லவன் ஒருவன், என்னை விரும்பினான். விலங்கை வேட்டையாடுவது போல் பாவனை செய்துகொண்டு,  பலநாள் என்னைப் பின்தொடர்ந்து  வந்தான். என் மீது விருப்பம் உள்ளதை அவன் வாயால் தெரிவிக்கவில்லை என்றாலும் அவன் செய்கையால்  நான் தெரிந்து கொண்டேன். எனக்கும் அவன் மீது விருப்பம் ஏற்பட்டது. அவன்  வந்து தன் காதலைச் சொன்ன பிறகு, நானும்  விருப்பத்தைச் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் அவனோ சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். இதனால் நானும் மிகவும் வருந்தினேன். தினந்தினம்  இக்கவலையிலேயே,  எனக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை, தூங்க முடியவில்லை, உணர்விழந்தவளாய் இருந்தேன். இவ்வாறு, அவள் ஒவ்வொன்றையும் சொல்லச்சொல்ல, 'இது நமக்கு நடந்ததல்லவா'? என்பது போல் தலைவி நெற்றியைச் சுருக்கி யோசிக்கலானாள்.
     இதைக் கவனித்த  தோழி, பேசலானாள். அவனாவது ஆண்...துணிந்து சொல்லலாம். நான் பெண்ணாயிற்றே எப்படிச் சொல்வது..! அதனால் நான் வெட்கமில்லாமல் ஒரு செயலைச் செய்துவிட்டேன். என்ன தெரியுமா? ஒருநாள் நான் வழக்கம் போல்  திணைப்பயிரைக் காக்கச்சென்றேன், அவனும்  அவ்வழியாகப்போவது போல் என்னைப் பின் தொடர்ந்து வந்தான். அப்போது நான் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு,  அவனை அழைத்து,  'ஐயா  சற்று என் ஊஞ்சலை ஆட்டி விடுங்கள்' என்றேன். அவனும் அப்படியே செய்கிறேன் என மகிழ்ச்சியுடன்  ஊஞ்சலை ஆட்டினான். அப்போது நான் கை நழுவி..ஊஞ்சலில் இருந்து விழுந்ததைப் போல், பொய்யாக  மயங்கி அவன் மீது சாய்ந்துவிட்டேன். 
       இதை சற்றும் எதிர்பாராத அவன், மயங்கிச் சரியும் என்னை அப்படியே அவன்  தோளில் சாய்த்துக் கொண்டு, நீண்டநேரம் பாதுகாப்பாக அக்கறையுடன் என்னைத் தாங்கி நின்றிருந்தான். பிறகு நானே சுய உணர்வு பெற்றவள் போல் எழுந்தேன். பெண்ணே கவனமாகச் செல் என என்னை அனுப்பி வைத்தான் அவன். நான் மயங்கி நின்ற வேளையிலும் என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்ட அவன் மிகவும் மேம்பட்ட குணத்தவன் என்று நெகிழ்ந்து கூறுகிறாள். ஒருவேளை நான் உடனே கண் விழித்திருந்தாலும் கூட  அழகிய பெண்ணே கவனமாகச் செல் என்று சொல்லி என்னை பாதுகாப்பாக அனுப்பி வைத்திருப்பானே தவிர எச்சூழலிலும் என்னிடம் கண்ணியக் குறைவாக அவன் நடந்திருக்கமாட்டான். அவ்வளவு உயர்ந்த பண்பை உடையவன் அவன் என்று வியந்து நெகிழ்ந்து சொன்னாள் தோழி!! இதற்கு மேலும் தலைவியால் தன் காதலைத் தோழியிடம் மறைக்க முடியுமா என்ன?
     ஒருவேளை, தலைவி ஊஞ்சலில் இருந்து உண்மையாகவே கூட விழுந்திருக்கலாம்.  ஆனால்  தோழி, பொய்யாய் விழுந்தேன்   எனச்சொல்கிறாள். அப்போதுதானே,  தலைவி பதறிப்போய் தன்  வாயாலேயே காதலை ஒப்புக்கொள்வாள். அதனாலும்,  தோழி நாணமில்லாதது செய்தேன் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.  பெரும்பாலும் உறவுகளுக்குள், நட்பு வட்டாரத்திற்குள் இது போன்ற உத்தியைக் கையாண்டு  உண்மையை ஒப்புக்கொள்ளச் செய்வாரகள். இது ஒரு உளவியல் வழிமுறை.
  
                           இச்சங்கப்பாடல் தோழிக்கும் தலைவிக்கும் இடையேயான  உரையாடல் போல் அமைந்திருந்தாலும், தலைவனின் கண்ணியத்தையே வியந்து பாடுகிறது. எந்நிலையிலும் ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளை அடைய நினைப்பது கண்ணியமான ஆண்மை இல்லை. கண்ணியம் கொண்ட ஒரு ஆண்மகனைத்தான் அக்காலத்தில் பெண்கள் விரும்பியிருக்கிறார்கள். வியந்து போற்றியிருக்கிறார்கள். எனவே தான் தோழியும், தலைவனை உயர்ந்த பண்பினன் எனப் பாராட்டுகிறாள்.           
        
நூல்- கலித்தொகை
பாடல்- குறிஞ்சிக்கலி,  எண் :  37.  பாடியவர் - கபிலர்.
தோழிகூற்று
துறை:

‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,’ தன்னை அவள் மறையாமை காரணமாக, ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல் வேறு கவர் பொருள் நாட்டத்தான்’ தலைமகட்குத் தோழி கூறியது
           
'கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; 5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற,  15
‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,  20
‘ஒண்குழாய்! செல்க’ எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்


  
இத்துறை , காதல் வயப்பட்ட தலைவியிடம், காணப்பட்ட மாற்றங்களையும் அவற்றைக் கண்டு , தோழி  அவள் களவை  ஒப்புக்கொள்ளச் செய்தலையும் குறிக்கிறது.

தலைவியிடம் காணப்படும் மாற்றங்கள்:
தலைவியின் உடலில் புதிதாய்  ஒரு வாசனை, தோற்றத்தில் கூடுதல் அழகு, குறைவான சாப்பாடு,  அடிக்கடி  எதையோ மறைக்க முயற்சிப்பது,  குறிப்பிட்ட ஒரு திசையிலேயே சென்று வருவது, குறிப்பிட்ட ஒரே இடத்திலேயே அடிக்கடி சுற்றித்திரிவது  இப்படி பல.




Comments

  1. நல்ல சிறப்பான நடை. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நாடகம் போல் உள்ளது. படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  3. Kaniyam - Solukana puridhal arumai..!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சங்கத்தடம் - கற்புள்ள மலைநாடன்!!!

சங்கத்தடம் - குற்றம் காணாதது காதல்