சங்கத்தடம் : அன்பறம் - 'துன்பத்திற்குத் துணையாக வாரேன்'
தலைவன் ஒருவன் தொழிலின் காரணமாக, வெகுதூரம் பயணம் செல்ல
முடிவெடுத்தான். பயணத்தில்
பல சிரமங்கள் வரும் என்பதால் தனியே செல்ல எண்ணினான். தலைவன்
பயணம் மேற்கொள்ளப் போவதை அறிந்த தலைவி,
தலைவனுடன் செல்லத் துடிக்கிறாள். ஆனால், தலைவனுக்கோ தன்னை
உடன் அழைத்துச் செல்லும் எண்ணமில்லை
என்பதை அறிந்ததும் மனம் கலங்குகிறாள். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவன் பிரிவை அவளால் தாங்கிக்கொள்ள இயலாது. மற்றொன்று, அவன் செல்லும் காட்டுவழிப் பாதையை நினைத்து அவள் கொண்ட அச்சம்.
பொதுவாக, நம் மனதிற்கு
இனியவர்களுக்கு எத்துன்பமும் நேரக்கூடாது என்பதுதான் அன்புமனம் கொண்ட ஒவ்வொருவரின் ஆசை. ஆனால், எதிர்பாராமல், ஏதாவது ஒரு துன்பம் அவருக்கு
வந்துவிட்டால், ஐயோ
முன்பே தெரிந்திருந்தால் இவ்வாறு நடக்க விட்டிருக்க மாட்டோமே எனப் புலம்பித் தவிப்போம். அன்புமனத்தின்
இயல்பு இப்படியிருக்க, பல்வேறு
தடைகளைத் தாண்டி, தன் காதல் தலைவனுடன் திருமண வாழ்வில் இணைந்திருக்கும் தலைவியின் காதல்மனம் என்ன பாடுபடும்? தன் அன்பிற்கினியக் கணவன் செல்லும் காட்டுவழிப்பாதை மிகவும் கொடுமையானது எனத்
தெரிந்தபின்!. எனவே
தான், தலைவி மனம் தாளாது தவிக்கின்றாள். என்ன சொன்னாலும் அவனுடைய பயணத்தை அவளால் தடுத்த நிறுத்தமுடியாது. ஏனெனில், உழைத்துப்
பிழைத்தலும், திரைக்கடலோடி திரவியம் தேடுதலுமே, ஆண்களுக்கு
உயிராக போதிக்கப்பட்ட சங்ககாலச் சூழலில் இருந்தாள் அவள். எனவேதான்,
தலைவனுக்குத் துணையாக உடன் பயணிக்க விரும்புகின்றாள். தலைவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்கிறாள்.
தலைவனுக்குத் தலைவியின்
மனவருத்தம் புரியாமலில்லை. தனக்கு
எந்தத் துன்பம்
வந்தாலும் தாங்கும் அவன் நெஞ்சம், தன் உயிர்த்தலைவிக்கு ஒன்று என்றாலும் தாங்காதே, எனவே
அவளைக் காப்பதில் உறுதியாக இருக்கின்றான். ஆனால், காதலில் மட்டுமல்ல, அக்காதலால் தாம் பின்னிய
குடும்பக்கூட்டிற்கும் எவ்வித
ஆபத்தும் வராமல் காப்பதில் உறுதியானவர்கள்
பெண்கள் ஆயிற்றே!! எனவே,
எப்படியேனும் தலைவனை உடனிருந்துக் காக்க வேண்டும் என்ற மன உறுதியுடன், அவனிடம் சென்று பேசுகிறாள் அக்காதல் தலைவி.
முதலில், தலைவன் செல்லும் பாலைவழியின் கொடுமையால் தான் அஞ்சுவதை விளக்குகிறாள். உயிரினங்கள் வாழ்வதற்கு எந்த நம்பிக்கையும் விட்டுவைக்காத,
கொடுந்தன்மை கொண்ட பாலை நிலத்தில், மேய்கின்ற பசுக்கள் கூட, உண்ண வேறு உணவில்லாமல் காய்ந்த கற்றாழையைச் சாப்பிடும். குடிக்க
நீரும் இருக்காது.
மழை என்ற ஒன்றைப் பற்றிய நினைப்பு கூட இல்லாத அளவிற்கு பூமி
வறண்டு காய்ந்திருக்கும். அங்கு
வாழும் மக்களுக்குப் பிழைக்க எவ்வழியும்
இல்லை. எனவே அவ்வழியே பயணம் மேற்கொள்பவர்களிடம் இருக்கும்
பொருளைப் பறிப்பர். அதற்காக, தூரத்தில்
இருந்தே கூர்மையான அம்பினை விடுவர். திடிரென்று எங்கிருந்தோ ஒரு அம்பு வந்து தாக்குவதால் அவ்வழியே
பயணம் செய்பவர்கள், சுருண்டு விழுவர். அப்போது கள்வர்கள் அவர்களிடம் இருக்கும் பொருளை எல்லாம் கவர்ந்து கொண்டு சென்று விடுவர்.
ஆனால் அம்பு பட்டுக் கிடப்பவர்கள், வலியில் துடித்துக் கதறி அழுவர். அவர்களுக்கு
உதவ அங்கு
யாருமே இருக்கமாட்டார்கள். உதவி
வேண்டி கூவிக்கூவி, தொண்டை எல்லாம் வறண்டு...குரல் எழுப்பக்கூடத் தெம்பில்லாமல் துவண்டு கிடப்பர். ஒரு
சொட்டு தண்ணீர் குடிப்பதற்குக் கிடைத்தால்
கூட போதுமே.... பிழைப்பேனே என நினைத்து மனம் வாடி கலங்கி வருந்துவர். இறுதியில்
ஒரு சொட்டுத் தண்ணீருக்கும் வழி இல்லாமல் போக, தன்
நிலையையை எண்ணியெண்ணி,
இப்படியொரு சூழ்நிலையில்
கிடக்கிறோமே என மனம்
நொந்து கண்ணீர் வடிப்பர். அவர்களின் கண்ணீர்
தான் வழிந்து போய், வறண்டு
கிடக்கும் அவர்களின் தொண்டையை நனைக்குமே தவிர வேறு கதி இல்லாத 'கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு' அது. அப்படிப்பட்ட ஆபத்து
மிக்க வறண்ட நிலத்தின் வழியே நீங்கள்
செல்ல இருக்கிறீர்கள். அங்கு நீங்கள் தனியே செல்ல ஒருநாளும் நான்
உடன்படமாட்டேன்.
இதை நீங்கள்
அறிவீர்களே.
அதுமட்டுமா... நீங்கள் என்னை விட்டுச் சென்றால், உங்களை நினைத்து நினைத்து
நான் எவவளவு மனம் வாடுவேன் என்பதையும்
அறிந்தவராயிற்றே
நீங்கள். நான் துன்பப்படுவதைத் தாங்கும் உள்ளம் உங்களுக்கு இல்லையே. என் மனம் துயர் கொண்டால்.. உடனே வாடும் மனத்தன்மை கொண்டவராயிற்றே நீர். எனவே, நான் சொல்வதைக் கேளுங்கள். இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும்
அன்பு மாறாமல், ஒருவருக்கொருவர்
துணையாக இருப்பது தானே இல்லற அறம். உங்களைத்
தனியே துன்பத்தில் விட்டுவிட்டு, நான் மட்டும்
வீட்டில் இருந்தால் அது அன்பறம் ஆகாதே. நல்லறமும் என்னைச் சூழாதே. அதனால்
என்னை உங்கள் துன்பத்திற்குத்
துணையாக வர அனுமதி தாருங்கள். துன்ப சமயத்தில் உங்களுடன் இருத்தலைத் தவிர, எனக்கு வேறென்ன இன்பம் இருக்கப்போகிறது, எனவே என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள், என
வேண்டி நிற்கிறாள் அக்காதல் தலைவி.
சிறுதுன்பம் என்றாலும் காணாமல் போகும் உறவுகளுக்கிடையே, மிகக்கொடியத் துன்பத்திலும் துணையாக வருகின்றேன்.....அதைவிட வேறு இன்பம் இல்லை எனக்கு என அன்பில் உருகி நிற்கும் தன்காதல் தலைவியை இனியும் உடன் அழைத்துப் போகாமல் விடுவானோ அக்காதல் தலைவன். அவள் துன்பத்தைத் தாங்கும் மனதைரியம் அவனுக்கு இருக்கிறதா என்ன?
இப்பாடல்,
எப்போதும் எச்சூழலிலும், தம் அன்பிற்குரியவரின் துன்பத்திற்குத் துணையாக இருத்தலைக் காட்டிலும் இன்பம் வேறில்லை ஒருவருக்கு, என்னும்
உயர்ந்த அன்பறத்தை எடுத்துச்
சொல்கிறது. இத்தகைய அன்பு உள்ளத்தினை மட்டும் இல்வாழ்வில் ஒரு தலைவனும் தலைவியும் பெற்றுவிட்டால் எத்துன்பத்தையும்
துரத்திவிடலாம் அன்றோ!!!
மேலும், அன்பிற்குரியவரைத்
தனியே அவதிப்பட விட்டுவிட்டு, அவர் என்னென்னத் துன்பப்படுகிறாரோ என எண்ணி எண்ணி மனம் வாடுவதைவிட, அவருடனேயே சென்று துன்பப்படுதல் எவ்வளவோ இன்பம் தரும். அதனால்
தானோ இராமாயணத்தில், தன்
அன்பிற்குரிய அண்ணன் ராமனுடன் செல்ல
இயலாத பரதன், இராமனுடன் சென்ற தம்பி இலட்சுமணனைப்
பார்த்து, நீ மிகவும்
புண்ணியம் செய்தவன்.
அண்ணனின் உயிர் பறிக்கும் அம்பை உன் மார்பில் தாங்கினாயே!! அவன் துன்பத்திற்கெல்லாம் துணை நிற்கும்
இன்பத்தைப் பெற்றாயே என நெகிழ்ந்துப் பாராட்டி நிற்கிறான். அடைக்கும் தாழ் இல்லாத அன்பிற்கு மட்டும்தானே, துனபத்தையும் இன்பமாக மாற்றும் பெரும்சக்தி உண்டு. அதனால் தானே, 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்றார் வள்ளுவர்.
இவ்வாறே, கலித்தொகையின் மற்றொரு பாடலும், எவ்விதத்
துன்பமும் விரும்பியோருக்கு நேராமல் காப்பதே அன்பு என்பதை ‘அன்பெனப்படுவது தன்கிளை செறாமை’ என்னும்
வரிகளால் எடுத்துரைக்கிரைக்கின்றது. இத்தகைய அன்பின் வழி நின்று, வாழ்வு
கண்டதால் தானோ, சங்ககாலம் நல்லறங்களைத் தாங்கி நின்றது! இந்த
அன்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாததினால் தானோ, இத்தலைமுறை அன்பு கசந்து... கண்ணீரில் கரைவதும் போதைத் தண்ணீரில் மூழ்குவதும் அமிலம் வீசுவதும் உயிரை எடுக்கவும் விடுக்கவும் துணிவதும் உறவை முறிப்பதும் எனத் தவித்துக் கொண்டிருக்கிறது!! அன்பு
என்பதன் தவறானப் புரிதலினால் ஏற்படும் இழிநிலை மாற, உண்மை அன்பு குறித்த நம் முன்னோர் சிந்தனைகளை அவர்தம் அனுபவ இலக்கியப் பெட்டகத்தில் அவ்வப்போது காண்பது சிறந்த வழியாக இருக்கும். இவ்விலக்கியங்கள் நம்
மனதை மட்டுமல்ல வாழ்வையும்
செம்மைப்படுத்தும்
என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பாடல்;
"மரையா
மரல் கவர, மாரி வறப்ப
வரை
ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை
அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம்,
உள்
நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு
தண்ணீர்
பெறாஅத் தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர்
நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என்,
நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின்
நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு
அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பம்
துணையாக நாடின், அது அல்லது
இன்பமும்
உண்டோ, எமக்கு?"
………………………………………………………………………………………………………………………………………………….
நூல்
; கலித்தொகை
பாடல்
எண் ; 6
திணை:
பாலை
தலைவி
கூற்று
துறை:
தலைவன்
செல்வதை அறிந்து, 'நீர் செல்லும் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு செல்லுங்கள்' எனத்தலைவி கூறியது.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

அருமை
ReplyDelete