சங்கத்தடம் - 'பல் முட்டின்றால் தோழி நம் களவே' - அம்மம்மா… அவளுக்குத்தான் எத்தனைத் தடைகள்!!
பொதுவாக நாம் யாரையாவது சந்தித்தால் எப்படி இருக்கிறீர்கள், எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று கேட்போம். பதிலுக்கு அவர்களும் நலம் என்பார்கள் அல்லது ஏதாவது சிக்கல்கள் இருந்தால் புலம்பித் தீர்ப்பார்கள். அதிலும், நலம் விசாரிப்பவர், தன் மனதுக்கு நெருக்கமானவர் எனில் சொல்லவே வேண்டாம் அங்குலம் அங்குலமாகத் தனது மனக்குறைகளை எல்லாம் மனம்திறந்து கொட்டித் தீர்ப்பார்கள். இம்மனநிலை எதார்த்தம் அல்லவா!. இதுபோல் ஒரு எதார்த்தமான உரையாடலைச் சங்ககால பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் 122, மிகச் சுவையாகப் படம்பிடிக்கிறது.
காதலாகிய களவு வாழ்வில் ஈடுபட்டுள்ள தலைவியைத் தோழி ஒருத்தி, அவளின் காதல் வாழ்வு பற்றி விசாரிக்கிறாள். தலைவியும்
வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாத, தன் காதலின் சோகநிலையை தோழியிடம்
கொட்டித்தீர்க்கிறாள். அப்படி என்னதான் பிரச்சனை அவள் காதலில் என்பதைப் பார்ப்போம்
வாருங்கள்! இப்பாடலில் இடம்பெற்றுள்ள தலைவி, இரவு நேரத்தில் தன் தலைவனைச் சந்திப்பதற்கு ஏற்ற சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பகலில்
தலைவன் தன்னைப் பார்க்க வந்தால் வேறு யாராவது பார்த்துவிடக்கூடும் என்பதால் இரவில்
அவனைச் சந்திக்க எண்ணுகிறாள்.
ஆனால் அவ்வாறு இரவில் சந்திப்பதற்கும் முடியாமல் எத்தனை தடைகள் வருகிறது என மனம் நொந்து ஆற்றாமையில்
தோழியிடம் புலம்புகிறாள்.
கடைவீதிகள் நிறைய இருக்கும் நம் ஊரில் மக்கள் கூட்டம் ஒருபுறம்,
கேளிக்கையாகத் திரிந்து கொண்டிருக்கும் ஆண்கள் மறுபுறம் என்றிருப்பதால் இரவு கூட பகல் போல் விழாக்கோலம்
கொண்டிருக்குமே! இதில் எங்கிருந்து தலைவனை நான் யாருக்கும் தெரியாமல் சந்திப்பது நீயே
சொல் தோழி! ஒருவேளை ஊரே ஒருநாள் அடங்கிவிட்டது என்று வைத்துக்கொள்! என்னை கடும்
சொற்களால் ஏசும் என் அன்னை, தூங்கமாட்டாள்! கொஞ்சம் கூட தப்பமுடியாத அளவிற்கு, எமனைப் போல் என்னைக் காவல் காக்கும் என்
அன்னையும் ஒருநாள் நேரத்தோடு தூங்கிவிட்டாள் என்று வைத்துக்கொள்...காவலர்கள்,
ஊரைக் காவல் காக்க இரவெல்லாம்...விழித்துக்கொண்டு என்னைக் கடுப்பேற்றுவர்.
சிறிதும் உறங்காத கண்களை உடைய, காவலர்களும் ஒருவேளை கண்ணயர்ந்தனர் என்று
வைத்துக்கொள்...கூரிய பற்களையும் வளைந்த வாலையும் கொண்ட நாய்கள் இரவெல்லாம்
குரைத்துக்கொண்டு மகிழ்ந்து என்னைத் துன்பப்படுத்தும்.
சிவந்த வாயைக்கொண்ட நாய்களும் ஒருநாள் குரைக்காமல் அடங்கி விட்டது என வைத்துக்கொள், அன்று
பார்த்துதான் இந்த நிலவு வெள்ளை வெளேரென்று நன்கு காய்ந்து
இரவைப் பகல் போல் வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும்!!!. நிலவும் ஒருநாள் மேகத்தின் மடியில்
சென்று உறங்கிவிட்டது என்று வை...நடு இரவில் வளைந்த வாயை உடைய ஆந்தைகள், பேய் போல அலறி உயிரே போவது
போல் பயமுறுத்தும்!! ஆந்தையும் ஒருநாள் அலறாமல் இருந்தது என்று வைத்துக்கொள், அதற்குள்…பொழுதே
விடிந்து சேவல் கூவத் தொடங்கிவிடும். வீட்டுக்கோழியும் அதனுடன் இணைந்து
கொக்கரிக்கத் தொடங்கிவிடும். இவையெல்லாம் கூட ஒருநாள் விடியற்காலையில் கூவாமல் இருந்து எல்லாம் எனக்கேற்றர்போல்
சரியாக இருந்தது என்று வை…அன்று பார்த்துதான், ஒருநாள் கூட என்னைச் சந்திக்காமல்
இருக்கமுடியாத, காதல்நெஞ்சம் கொண்ட என் அன்புக்காதலர்…. வந்துசேர மாட்டார்...நான்
என்ன செய்வேன் தோழி!!!
“நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே”
பாய்ந்து செல்லக்கூடிய குதிரைகளையும், மணிகள் கட்டப்பட்ட தேரையும் உடைய நம்
மன்னன் தித்தன் ஆட்சி செய்யும் உறந்தை
நாடு, எப்படி பகைவர்கள்
புகமுடியாதபடி கடுமையான காவல் படைகள், கொடிய முள்வேலிகள், முதிர்ந்த காடுகள் எனப் பல அடுக்குத் தடைகளைக் கொண்டு
இருக்கிறதோ அப்படிப் பல தடைகளைக் கொண்டிருக்கிறது தோழி ...என் காதல் வாழ்வு!!!
என்று, இரவில் கூடத் தன் தலைவனைச்
சந்திக்க முடியாதத் தலைவி, தோழியிடம் தன் நிலையை
எண்ணி புலம்பித் தீர்க்கிறாள்.
தலைவியின் நிழலாக இருக்கும் தோழிக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? அனைத்துக் கதையும்
தெரியும் அவளுக்கு!. எனினும் பெரிதும் தெரியாதது போலவே கேட்கிறாள் தோழி. ஏன் தெரியுமா?
வீட்டின் பின்புறத்தில் தலைவன் மறைவாக நின்று தலைவியைச் சந்திக்க சரியான நேரம் பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறான். இந்நேரத்தில் தோழி
கேட்டால்தான், தலைவனுக்குத் தலைவியின் மனவருத்தமும் அவனைச் சந்திக்கமுடியாமல் அவள்
படும் துன்பமும் புரியும். விரைந்து திருமணமும் செய்துகொள்வான். எனவேதான், அவ்வாறு
கேட்கிறாள் அவள!.. மனதுக்கு நெருக்கமானவர்களின் துன்பத்தினைச் சம்பத்தப்பட்டவருக்கு
உணர்த்த, மனம் திறந்து பேசும் ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டால் போதும், பெரும்பாலானச்
சிக்கல்களுக்கு அதுவே ஒரு தீர்வாக அமைந்துவிடும். மனம் திறந்து பேசுவதால் ஒருவரின்
மனபாரம் குறைவதோடு, அவர்தம் ஆற்றாமைக்கும் ஆறுதல் கிடைத்து சிக்கல்கள் தீரவும் வழியுண்டாகும்.
இது ஒரு உளவியல் உத்தி. இவ்வுத்தியைப் பயன்படுத்தியே, தன் தலைவியின் களவு வாழ்வுச்
சிக்கலைத் தீர்க்க முனைகிறாள் சங்ககாலத்தோழி. இன்றுவரை மக்கள் வாழ்வியலில் இத்தகைய
உரையாடல் முறையும் உளவியல் உத்தியும் இருந்து வருவது கண்கூடு.
இப்பாடல், அக்கால மக்களின் உளவியல் திறனை மட்டுமின்றி, அவர்களின் எதார்த்தமான
உரையாடல் முறையையும் நன்கு படம்பிடிக்கிறது. மேலும், ஒரு பெண்ணின் வீட்டுக்காவலும்
ஒரு நாட்டின் எல்லைக் காவலும் சமநிலையில் வைத்துப் பாடப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது.

சிறப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteUnarvin mozhi😍. Arumai🌺
ReplyDelete