இலக்கியத்தடம் - பசிவலி
"என்னை இப்படி பாடாய்ப் படுத்துகிறாயே... இதற்கு மேல் உன்னோடு வாழமுடியாது" என்றெல்லாம் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். தினம் தினம் துன்பம் அனுபவித்து இனி தாங்கவே முடியாது என்று மனம் சலித்து போகும்போது தான், இப்படி சொல்லத் தோன்றும். அப்படி ஒரு மனசலிப்பு நம் ஔவையாருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? கதையல்ல உண்மைதான். "ஒரு நாளாவது என் துன்பத்தை நீ புரிந்து கொண்டு நடந்திருக்கிறாயா? உன்னோடெல்லாம் வாழ்வது கடினம்" என்று மனம் நொந்து புலம்பித் தள்ளியிருக்கிறார் ஔவை ஒரு பாடலில். அப்படி அவரைப் புலம்ப வைத்தது எது தெரியுமா? பசி. ஆம். பசியே தான்.
அக்காலத்தில் புலவர்கள், தங்கள் வறுமையைப் போக்கவும், தமிழைப் பாடவும் தமிழ் ஆர்வலர்களைத் தேடிச் செல்வர். பலநாட்கள் செல்லக்கூடிய நீண்டதூரப் பயணங்களாகவும் அவையிருக்கும். சில இடங்களில் அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். சிலசமயங்களில் உணவே கிடைக்காமல் மிகுந்த பசியால் துன்பப்படவும் நேரிடும். ஔவையும் இது போன்றதொரு துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார். பயணத்தின்போது பலமுறை அவருக்குச் சாப்பாடு கிடைக்காமல் போயிருக்கிறது. ஒருநாள் அவர் பசித்துன்பம் தாங்க முடியாமல், 'நான் அப்போதே உனக்குச் சொன்னேனே.. போகும் இடம் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது, ஓருநாள் சாப்பாடு கிடைக்காமலும் கூட போகலாம். அப்படி நடந்தால், என்னைத் தொந்தரவு செய்யாமல் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் உணவை விட்டொழிக்கப் பழகிக்கொள், இல்லையென்றால் நிறைய கிடைக்கும்போதே இரண்டு நாளைக்குச் சேர்த்து சாப்பிட்டுக்கொள் என்று. என் சொல்லைக் கொஞ்சமாவது கேட்டாயா? கொஞ்சம் கூட என் வேதனையை உணராமல், சாப்பாடு கேட்டு பசித்துன்பத்தைக் கொடுத்து என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறாயே..ஒருநாளாவது என் துன்பத்தை நீ புரிந்து நடந்திருக்கிறாயா? உன்னுடனெல்லாம் வாழ்வது மிகவும் கடினமானது" என்று அதிகப்பசியில் புலம்பி சண்டையிடத் தொடங்கிவிட்டார் ஔவையார்!! யாருடன் தெரியுமா? தன் வயிற்றுடன் தான்!!!.
"ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது" - நல்வழி
படிப்பதற்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதிகப் பசியில் நாம் இருக்கும்போது சோறு கிடைக்கவில்லை என்றால் நாம் எப்படியெல்லாம் நம் ஊறவுகளை திட்டித்தீர்ப்போம். நம் அவல நிலையை நினைத்து நினைத்து எவ்வளவு வேதனை கொள்வோம் என்று நினைத்துப் பாருங்கள். இந்தப்பசியைப் போக்கும் மனிதத்தேடலில் தானே, மாபெரும் நாகரிகங்கள் உருவானது. அந்த நாகரிக வாழ்வும் நைந்து போவதற்கு பசிதானே காரணமாகவும் அமைந்தது. அன்று முதல் இன்று வரை உலகில் நடக்கும் பல குற்றங்களுக்குப் பசித்துன்பமே அடிநாதமாக இருந்திருப்பதை வாழ்க்கையும் வரலாறும் இலக்கியமும் நமக்கு எடுத்துக் காட்டுகிறதே! திருட்டு, கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் குற்றப்பின்னனியாக பசிக்கொடுமை இருந்து வருவது நடப்பியல். பசி போக்காத மன்னனை மக்கள் தூக்கி எறிவதும், நல்ல உணவுத்திட்டங்களால் எத்தனையோ ஆட்சிகள் நிலை நிறுத்தப்படுவதும் வரலாறு. மணிமேகலை என்னும் மாபெரும் காப்பியத்தில், பசிநோயை போக்கித்தானே சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றிக் காட்டுகிறாள் மணிமேகலை. அதனாலன்றோ, வள்ளுவரும், பசி போக்கும் உழவர் பின் தான் என்றும் உலகம் செல்லவேண்டும் என்பதைப் பின்வரும் தலைமுறைக்கு நன்றாய் உணர்த்த, 'ஏர் பின்னது உலகம்' எனச் சொல்லிச் சென்றார். பசி தந்த இந்த அனுபவத்தினால் தானே, 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்னுமொரு பாடலையும் பாடி 'பசிவலி' உணர்த்திச் சென்றார் ஔவையார்!! .
பிணிகளில் கொடுமையானது பசிப்பிணிதான் என்பதை ஔவையின் இந்தப் பாடல் உணர்த்துகிறது, உங்கள் வரிகளும் அதை நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
ReplyDelete