நீர்வழிப்படூ உம் புணை போல் - சூழலை ஏற்றல் அறிவுடைமை
நீர்வழிப்படூ உம் புணை போல் - சூழலை ஏற்றல் அறிவுடைமை
வாழ்க்கையை நம் முன்னோர்கள் ஓடும் நதியோடும் விரிந்த கடலோடும் ஒப்பிட்டு ஏன், எதற்கு சொன்னார்களோ தெரியாது. ஆனால், வாழ்வில் நிகழ்பவற்றை உற்றுநோக்கினால் அவ்வார்த்தைகள் பொருத்தமாகத்தான் இருக்கிறது. சிலநேரங்களில் கடலைவிட வாழ்க்கை அழகாகத் தெரியும். பலநேரங்களில் வாழ்வை விட கடல் அழகாய்த் தோன்றும். ஏன் இப்படி முரணாகத் தோன்றுகிறது. பிரச்சனை நேரத்திலா, கடலிலா அல்லது தோன்றலிலா, வாழ்விலா எனப் புரியவில்லை. ஒருவேளை அது புரிந்துவிட்டால் ஒப்பிடுவதற்கானக் காரணம் கிடைக்கலாம்.
வாழ்க்கைக் கடலில் நீந்த ஆசைப்படுவதால் தானே, எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கிறது. ஆசையும் வேண்டாம் நீச்சலும் வேண்டாம் என்று அமைதியாகக் கரையில் நின்றால்... தேடிவந்து காலில் மோதுகின்றன பிரச்சனையாகிய அலைகள். அலையின் மோதலில் கால்கள் மண்ணில் புதைய, உறுதியாக நிற்பதாலோ என்னவோ அலைகள் பணிந்து பின்வாங்குகின்றன. அல்லது நமக்கு அப்படித் தோன்றுகிறது. தோன்றலினால் எழுந்த நம்பிக்கையோ, ஆணவமோ அல்லது இனம்புரியாத மகிழ்வோ எதுவோ ஒன்று, பின்வாங்கும் அலைகளை உதைத்துக்கொண்டு நம் கால்களை முன்னேறிச் செல்லத் தூண்டுகின்றன.
சிறிதுதூரம் முன்னேறியும் செல்வோம். ஆனால்.... இப்போது பணிந்து பின்வாங்கிய அலைகள் ஆரவாரத்துடன் பலஜோடிக் கைகளை விரித்து பரப்பிக்கொண்டு முன்பைவிட ஆர்ப்பரிப்புடன் மேலோங்கி நம் எதிரே ஓடோடி வருகிறது. திகைத்துப் போகிறோம்! இது என்ன வினையா? விளையாட்டா?. அதன் இலக்கு நானா, கரையா? இப்போது அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. என் இலக்கு எது? கரையா, கரைவதா? அதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும்.
கரையேறுவதாக இருந்தால்....மூச்சுப்பிடித்து முன்னேறி அலைமுதுகில் படகேறலாம். வேறானால், அலையடிப்பில் வீழ்ந்து வெறும் சக்கையாய்க் கரைந்து கரையில் வீசி எறியப்படலாம். எடுக்கப்படும் முடிவே இதைத் தீர்மானிக்கும். முடிவையும் அறிவே நிர்ணயிக்கும். அறிவையும் அனுபவமே பெற்றுத்தரும். அந்த அனுபவமும் நமதாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மூத்தோர் அனுபவமாக இருந்தால்... அதை ஏற்பதால் நமக்குக் கேடில்லை.
இவ்விஷயத்தில் நம் சங்கப்பாட்டன், கணியன் பூங்குன்றனாரின் அனுபவ உரை என்ன தெரியுமா? 'நீர்வழிப்படூ உம் புணை போல்' இரு என்பதே ஆகும். அதாவது நீரின் ஓட்டத்திற்கேற்ப படகு செல்வது போல், வாழ்வு செல்லும் திசை உணர்ந்து, மனிதர் நடத்தலே புத்திசாலித்தனம் என்கிறார். ஏனெனில் நீர் செல்லும் திசையில் படகைச் செலுத்தாமல் அதற்கு எதிர்த்திசையில் படகைச் செலுத்த முயற்சித்தால் துடுப்பு இயக்குவது கடினம். பயணமும் சுலபமாக இருக்காது. கரையேறுவோம் என்று உறுதியாகச் சொல்லவும் முடியாது. ஆனால் நீர் ஓடும் திசையிலேயே படகைச் செலுத்தினால் கரைசேர்வதில் பெரும் சிரமம் இருக்காது. நீர் இழுப்பிலேயே நாம் செல்வதால் அலை மீது ஏறினாலும் கரை சேர்ந்து விடுவதற்கு வாய்ப்பு அதிகம். துடுப்பு போடுவதும் எளிதாக இருக்கும். அது போலத்தான் வாழ்வும்.
அதெல்லாம் சரிதான், ஆனால்...எச்சூழலில் இக்கருத்து நமக்குத் தேவைப்படும்? வாருங்கள் பார்ப்போம். எது எப்போது எப்படி...நடக்கும் என்று எதுவும் தெரியாததே வாழ்வு. இவ்வாழ்வில், ஒன்று... நாம் எதையும் அறியாமல் வாழ்கிறோம். அல்லது எல்லாம் அறிந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் யூகத்தினால் வியூகம் அமைத்து வாழ்கிறோம். இத்தகைய வாழ்வியலில் சில நேரங்களில் நாம் ஒரு வழியில் செல்ல நினைப்போம். ஆனால் சூழல் அல்லது தேவை நம்மை வேறு வழியில் செல்லச் செய்யும். இச்சூழலில் விருப்பம் முக்கியமா? பயணிப்பது முக்கியமா? எதைத் தேர்ந்தெடுப்பது எனத்தெரியாமல் தவித்து நிற்போம். இதைத் தேவை அல்லது நெருக்கடி தான் தீர்மானிக்கும். தேவை தான் என்றால் சிறிது காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு விரும்பிய வாய்ப்பிற்காகக் காத்திருக்கலாம்.
ஆனால் நெருக்கடி என்றால் களத்தில் இறங்கவேண்டியது கட்டாயம். அப்பயணத்தையே வாய்ப்பாகக் கருதிக் கரை ஏறுவதையே இலக்காகக் கொள்ளலாம். ஆனால் இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம்.
ஏன் தெரியுமா? பாழும் மனிதமனத்தின் தன்மை அப்படி. பிடித்ததைச் செய்யமுடியாமல், செல்லுகின்ற பாதையும் பிடிக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு நம்மை ஆளாக்கும். இப்போது நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி....உளைச்சலைப் பார்ப்பதா? பிழைத்தலைப் பார்ப்பதா? இதென்னக் கேள்வி. உளைச்சலையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தால் பிழைக்க முடியாது. எனவே பிழைத்தல் தான் முக்கியம். பிழைத்துவிட்டால் உளைச்சலைத் தீர்க்க வழி பிறக்கும் அல்லவா? இப்பிழைத்தலுக்கான வழிமுறை தான் "நீர்வழிப்படூஉம் புணைபோல்". அதாவது நீர் வழி செல்லும் படகு போல் வாழ்வின் வழி நாம் செல்லுதல், ஆம். வாழ்வில், அடுக்கடுக்காய் வரும் துன்ப அலையில் மூழ்கிவிடாமல் உறுதியான நெஞ்சமாகிய துடுப்பைப் பயன்படுத்தி வாய்ப்பாகிய நீரோட்டத் திசையில், பயணமாகிய பிழைத்தலை மேற்கொண்டு, நிலைப்பதாகிய கரையை அடையலாம். கரையேறிவிட்டால் வாழ்வு இப்போது நம் கையில். இனி செல்லும் பாதையை நாம் தீர்மானிக்கலாம். இப்பெரு விளக்கத்தைத்தான் இப்பாடல் வரி எடுத்துரைக்கிறது. ஒற்றை வரியில் பிழைத்து நிற்றல் (Survival) கோட்பாட்டை உரைத்திருக்கின்றனர் சங்கச் சான்றோர்.
இக் கோட்பாடு, இந்நாளில் உலகில் நிலவும் கொடிய கொரோனா சூழலுக்குச் சாலப் பொருந்துகிறது. ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதாவன் ஆண்டான் அடிமை மருத்துவன் நோயாளி என எவ்வித வேறுபாடும் இன்றி குலை குலையாய் எல்லோரையும் கொன்று குவித்துக் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது கொரொனா என்னும் தீ நுண்மி. இது, ஏன் எப்போது எப்படி யாரைத் தாக்கும் எனச் சொல்ல முடியாது. எப்போது போகும் என்றும் உறுதியாகக் கூறவும் முடியாது. ஒரு மாதத்தில் ஒழிப்போம், ஒரு ஆண்டில் அகற்றுவோம் என்ற வாய்ச்சொற்கள் வலுவிழந்து, கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் தான் இப்போது நம் மீது வாரி வீசப்படுகிறது.
இச்சூழலில், சூழலை ஏற்று, பிழைத்தலுக்கான வழியினைக் கண்டு அதிலிருந்து முரண்பட்டு நிற்காமல், முனகாமல், வீட்டுக்குள் முடங்கியோ அல்லது வீதியில் பாதுகாப்பு நடைமுறைகளுடனோ இயங்கக் கற்றுக் கொண்டவர்கள் தான் பிழைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் இன்று உலகமே இருக்கிறது. அட! உலகத்த விடுங்க சாமி நான் எப்படிப் பிழைப்பது என்கிறீர்களா? நீர்வழிச் செல்லும் புணை போலத்தான்....... இன்னும் புரியவில்லையா மீண்டும் கட்டுரையை முதலில் இருந்து வாசியுங்கள்.
………………………………………………………………………………………………
Comments
Post a Comment