அன்னையர் தின வாழ்த்துக் கவிதை - அன்னையே வரம் தா!!
அன்னையே வரம் தா!!!
அசட்டையாய்ப் பார்த்த
வெறுப்புக் கணைகளைத்
தடுத்துக் காத்த அரணே!
என் அன்பு அம்மாவே!
தவழும் பருவத்தில்
என் கழுத்து சிக்கியதால்
கட்டிலை ஒற்றைக் கையில்
அலேக்காய்த் தூக்கி உடைத்த
சந்திரமுகியே!!
உனக்குக் கிடைக்காத கல்வி
எனக்கு கிடைத்தே தீருமென
கட்டியங்கூறிய
பெண் காமராசே!
வளரும் பருவத்தில்
என்மீதான
விடலைப் பார்வைகளை
உன் புருவமீசையால்
விரட்டியடித்த பாகுபலியே!!
வாழ்க்கைத் துயரங்களை
உன் பாசக்கவசத்தால்
பொறுமை குண்டலத்தால்
களம் கண்ட
கருணை கர்ணியே!!
என் திருமணத்தன்று
நீ கலங்கினாய்…
என்மகள் திருமணத்தை
நினைத்த நொடியில்
தான் புரிந்தது…
அடைக்கும் தாழ்
இல்லாத உன் அன்பு!!
என் பிரசவ அறைக்கு வெளியே
நீ துடித்த துடிப்பில்…
தான் உணர்ந்தேன்!
என்வலியும்! உன் தாய்மையும்!!
என்றும் எனக்கான முடிவுகளை
நீ சிந்தித்தபோது
தடித்த என் சுயகௌரவம்
சுருங்கித்தான் போனது
அவற்றால் நான் உயர்ந்தபோது!!!
இன்றும்….
உன் நினைவில் என் நலன்
உன் நிழலில் என் உருவம்
உன் கண்ணாடியில் என் முகம்
உன் பேச்சில் என்
பெருமை…
போதும் தாயே…
உனக்கு யாதுமாகி நான் நின்றது…
முதுமைக் குழந்தையாய் நிற்கும் உனக்கு
நான் அன்னையாகும் வரம் தா!!
பெண்ணுக்கொரு நீதி வகுக்கும்
என்னருமை சமுகமே!!
தாய்மை மட்டும் வரமல்ல!!
தாயோடு வாழ்வதும்
வரமே!!!
அவ்வரத்தைப் பெண்ணுக்கும் தா!!!
Comments
Post a Comment